Wednesday, April 7, 2010

என்னைக் கவர்ந்த ஒரு படைப்பு

உயர்ந்த இடத்தில் உயர்ந்த நட்பு.

திறமைகள் இன்றி எவரும் உச்சத்திற்கு வரமுடியாது. அதிஸ்டங்களின்மூலம் எவரும் சிகரங்களை தொட்டதில்லை. அப்படி தொட்டுவிட்டாலும் அது நிலைத்து நின்றதில்லை. அந்த வகையில், உண்மையில் திறமைகள், அர்ப்பணிப்புக்களால் உயர்ந்தவர்களே நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும்.மூன்று தலைமுறைகளை கடந்து இன்று பிறக்கும் குழந்தைகளையும் கவரவைக்கும், பாக்கியம் இந்த இரண்டுபேருக்குமே கிடைத்துள்ளது. எப்படி இருந்தாலும், இந்த இரண்டுபேரின்மேலும் தொடர்ச்சியாக சேறுபூசும் நடவடிக்கைகளிலும், இவர்களை காரசாரமாக விமர்ச்சிக்கும் வகையிலும் ஒரு கூட்டம் தொடர்ந்தும் ஈடுபட்டே வருகின்றது.இந்த விமர்சனங்களை படிக்கும்போதெல்லாம் எனக்கு மேல்எழும் கேள்வி, இந்த இருவரின் நிலையில் இந்த விமர்சனம் எழுதுபவர் போன்றோர் இருந்திருந்தால் தமிழ் திரையுலகம் என்ன பாடுபடும் என்பதே.ஒரு துறையில் உச்சத்திற்கு வருவது என்பது மிக கஸ்டமான விடயம். அதேவேளை உச்சத்திற்கு வந்துவிட்டால் அதை தக்கவைத்துக்கொள்வது மிக மிக கஸ்டமானவிடயம். உச்சத்திற்கு வந்து அதை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்திருக்கின்றார்களே இது எவ்வளவு கஸ்டமான விடயம்?

கமல்ஹாசன் என்னைப்பொறுத்தவரையில் வார்த்தைகளால் விபரிக்கமுடியாத ஒரு அருமையான நடிகர். சூரியனின் பிரகாசம் எப்படி இருக்கும் என வார்த்தைகளால் சொல்லமுடியாது என்பதுபோல கமல்ஹாசனுடைய நுணுக்கமான நடிப்பினையும் எழுத்துக்களால் அடுக்கிவிடமுடியாது. உண்மையிலேயே கமராவுக்கு முன்னால் அன்றி வெளியில் நடிக்கத்தெரியாத அப்பாவியான ஒரு மனிதர் கமல்ஹாசன்.தன் மனதில் உள்ளவற்றை தைரியமாக இரண்டு பேர்களே வெளியிடுவார்கள், ஒருவர் பைத்தியக்காரன் (நம்ம நண்பர் பதிவர் பைத்தியக்காரன் இல்லை, நிஜமான பைத்தியக்காரன்) மற்றவர் அனைவருக்கும் உண்மையாக, மனத்தைரியத்துடன், தன்னைமட்டும் முழுமையாக நம்பி எதையும் எதிர்கொள்ளத்துணிந்தவர். மதிப்பிற்குரிய கமல்ஹாசன் அவர்களையும், முதலாமவர்போல சிலர் விமர்சித்தும், இரண்டாமவர்போல பலர் ஏற்றுக்கொண்டும் உள்னர்.

ஒரு செவ்வியில் கமல்ஹாசன் கூறியிருந்தார், தேவர் மகன் திரைப்படம் எடுப்பதற்காக கதைவிவாதத்தில் கலந்துகொண்டிருந்தபோது, தனது தந்தை பாத்திரத்திற்கு நடிகர் திலகம் அவர்களை கேட்போம் என தான் கூறியபோது, இப்போ அவர் நீண்ட நாட்களாக நடிக்கவரவில்லை, அத்தோடு இப்போது அவரது மார்க்கட்டும் நல்லா இல்லை, வேறு யாரையாவது போடுவோமே என தனக்குக்கூறிய மேதாவிகளும் உள்ளனர். அந்தப்படத்தில் நடிகர்திலகம் நடித்தமையினால்த்தான் அது தேவர்மகன் ஆனது. இல்லை என்றால் அது வெறும் மகன்தான் என்று கூறியிருந்தார்.அதேபோல கமலுக்கு என்ன தெரியும்??? என்று கேட்கும் மகா மேதாவிகளும் இப்போது அதிகம் கூடிவிட்டனர்.

கலைஞன் என்பவன் தான்மட்டும் முன்னேறாமல் சக கலைஞர்களையும் உயர்த்திச்செல்பவன் என்பதுக்கு தமிழில் நடிகர் கமல்ஹாசனைத்தவிர வேறு உதாரணங்கள் தேவையில்லை என நினைக்கின்றேன். நம்மவர் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தைவிட நடிகர் கரனுடைய பாத்திரம் தன்னை தூக்கிச்சாப்பிடும் அளவுக்கு வந்திருந்தாலும், கரனுடைய சிறந்த நடிப்பினை பாராட்டி தான் அடங்கிநடித்திருந்தார், அதேபோல குருதிப்புனலிலும் மேலும் சில படங்களிலும் நடிகர் நாசரின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன. இறுதியாக உன்iனைப்போல் ஒருவனிலும், மோகன்லாலினுடைய பாத்திரம் கமல்ஹாசனைவிட உயர்ந்ததாகவே இருந்தது. தன்னைமிஞ்சி ஒரு சக கலைஞன் இருந்துவிடக்கூடாது என்று இன்று பொறாமை கொண்டு அந்தக்காட்சியினையே கத்தரிக்க வைக்கும் பல கதாநாயகர்கள் முன்னிலையில் கமல்ஹாசன் உண்மையிலேயே ஒரு கலைஞன்தான்.எனக்கு இருக்கும் சந்தேகம் ஒன்றுதான் ஏன் கமல்ஹாசன் நடிகர் ரகுவரனுடன் இணைந்துநடிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை என்பதுதான். எப்போதாவது அதற்கான பதில் கமல்ஹாசனிடமிருந்துவரும் என காத்திருக்கின்றேன்.சரி..மீண்டும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இரண்டுபேரிடமும் வருவோம். நான் பெரிதா நீ பெரிதா? என்னைவிட இவன் பெரிய ஆளா? இவனைப்பாராட்டுவதா? இவனை ஊக்கப்படுத்துவதா? என நடிகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் என இருக்கும்போது எப்போதும் தமக்கு நேரடியான போட்டியாக இருக்கும் ஒருவருக்கொருவர் நட்பெனும் பாசத்தால் பிணைந்துகொண்டுள்ளது உண்மையானது, உண்மையான கலைஞர்களால் மட்டுமே அந்த பக்குவத்தை அடையமுடியும். (இந்த இருவர் தவிர நடிகர் சிவகுமாருக்கும் அந்த பக்குவம் உண்டு) மனது பண்படுத்தப்பட்ட இருவரால்த்தான் அந்த நிலையில் அப்படி இருக்கமுடியும். உண்மையில் இந்த சிகரங்கள் இருவருமே மனங்களை மலரச்செய்தவர்கள், மனம் பண்பட்டவர்கள். தமிழ் நாடு இந்தியா என்று கடந்து ஆசியா, மற்றும் உலக நாடுகள் எல்லாம் அறியப்பட்ட முதலாவது இந்திய நடிகனாக இருந்தும்கூட தன்னைத்தாழ்த்தி தன் நண்பனான கமல்ஹாசனை உயரச்செய்யும் மலர்ந்த மனம், வெறும் புகழ்ச்சியாக அன்றி உண்மையாகவும் அதுவாகவே நடக்கவும் ஒரு ரஜினிகாந்தினால் மட்டுமே முடியும்.
அதேபோல என் நண்பன் ரஜினிகாந்த்தான் உண்மையான, எப்போதும் சுப்பர் ஸ்ரார் என வெளிப்படையாக பலர் மத்தியில் சொல்லும் பக்குவமும், அதேநண்பனை கட்டிஅணைக்கும்போது கண்கள் கலங்கி சொன்னவார்த்தைகளைவிட ஆளமான நட்பினை மௌனங்களால் வெளிப்படுத்தவும் ஒரே ஒரு கமல்ஹாசனினால் மட்மே முடியும். முக்கிமான இந்த இரண்டுபேருக்கும் இடையிலான புரிதல் இந்த நட்பின் அணிவேர். இருவரும் சந்திக்காமல் இருந்தாலும் ஏன், சொல்கின்றார்? எதற்காக செய்கின்றார்? என்ற புரிதல் இரண்டுபேரிடமும் இருந்தது. இருவருமே பந்தயத்தில் ஜெயிக்கவேண்டும் என்பதும் இருவரின் மனத்தில் நிலைத்தே இருந்தது. போட்டிகள் இருந்தும் அவர்களிடம் பொறாமைகள் இருக்கவில்லை. இதன்மூலமாகவே இருவராலும் இன்றுவரை முன்னணியில் ஓடமுடிகின்றது. நேற்றுவந்தவர்கள் என்ன நாளைவருபவர்களையும் முந்திக்கொண்டு ஓட அவர்களால் முடியும்.

http://janavin.blogspot.com/

No comments:

Post a Comment